திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம் பண் - தக்கராகம் |
ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
சீரு லாவு மறையோர் நறையூரிற்
சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.
|
1 |
காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி
ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ
வீடு மாக மறையோர் நடையூரில்
நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே.
|
2 |
கல்வி யாளர் கனக மழல்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரிற்
செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.
|
3 |
நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
ஆட வல்ல அடிக ளிடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரிற்
சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
|
4 |
உம்ப ராலும் உலகின் னவராலும்
தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
நண்பு லாவு மறையோர் நறையூரிற்
செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
|
5 |
கூரு லாவு படையான் விடையேறிப்
போரு லாவு மழுவான் அனலாடி
பேரு லாவு பெருமான் நறையூரிற்
சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே.
|
6 |
(*)அன்றி நின்ற அவுணர் புரமெய்த
வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
மன்றில் வாச மணமார் நறையூரிற்
சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
(*) அன்றி நின்ற என்பதற்கு பகைத்து நின்ற என்று பொருள்.
|
7 |
அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால்
நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரிற்
திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
|
8 |
ஆழி யானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
சூழு நேட எரியாம் ஒருவன்சீர்
நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.
|
9 |
மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்
உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற்
செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே.
|
10 |
மெய்த்து லாவு மறையோர் நறையூரிற்
சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி
அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம் பண் - தக்கேசி |
பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர்
கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர்கங்காளர்
மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில்மகிழ்வெய்திச்
சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
|
1 |
பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே
தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர்விடையேறிக்
கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கைச்
செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச்சரத்தாரே.
|
2 |
முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல்
பொடிகொள்நூலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக்
கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பாயக்
கொடிகொள்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
|
3 |
பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி
மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும்ஒருகாதர்
பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்துசெண்பகஞ்
சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
|
4 |
நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர்
பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே
தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்லச்
சீரார்கோலம் பொலியும்நரையூர்ச் சித்தீச்சரத்தாரே.
|
5 |
நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை
தூண்டும்சுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத்தெழிலார்வந்
தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்குகோபுரந்
தீண்டுமதியந் திகழும்நரையூர்ச் சித்தீச்சரத்தாரே.
|
6 |
குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந்
தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கீளர்
எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறிக்
கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே.
|
7 |
கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை
வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி
உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார்
திரையார்புனல்சூழ் செல்வநரையூர்ச் சித்தீச்சரத்தாரே.
|
8 |
நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய்
அடியாரவரும் அருமாமறையும் அண்டத்தமரரும்
முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வாஅருளென்ன
செடியார்செந்நெல் திகழும்நரையூர்ச் சித்தீச்சரத்தாரே.
|
9 |
நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார்
ஒள்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட்டுழல்வீர்காள்
கன்னுண்பயப்பா லுண்ணமுலையில் கபாலமயல்பொழியச்
சென்றுண்டார்ந்து சேரும்நரையூர்ச் சித்தீச்சரத்தாரே.
|
10 |
குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை
செயிலார்பொய்கை சேரும்நரையூர்ச் சித்தீச்சரத்தாரை
மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன்
பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |